எதையும் சீக்கிரம் கற்றுக்கொள்ளும், 'கற்பூர புத்தி' திறன் சிலருக்கு இயல்பாகவே உண்டு. சிலருக்கு சற்று தாமதமாகத்தான் எதுவும் பிடிபடும். இப்படி மந்த புத்தி உள்ளவர்களுக்கு, நம் சமையலறையில் உள்ள மசாலா அயிட்டமான இலவங்கப் பட்டை உதவக்கூடும் என்கிறது சமீபத்திய ஒரு ஆய்வு.
அமெரிக்காவிலுள்ள ரஷ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானியான மருத்துவர் கலிபாதா பாஹனும், அவரது குழுவினரும், ஆய்வகத்தில் எலிகள் மீது நடத்திய அந்த ஆய்வின் முடிவில், பட்டையின் மகிமை தெரியவந்துள்ளது.
இலவங்கப் பட்டைக்கு கம கம வாசனை தருவது, 'சினமால்டிஹைட்' என்ற வேதிப்பொருள். இதை நம் கல்லீரல் செரிமானம் செய்து, 'சோடியம் பென்சோவேட்' என்ற வேதிப்பொருளாக மாற்றி ரத்தத்தில் கலக்கச் செய்கிறது.
ரத்தத்தின் மூலம் சோடியம் பென்சோவேட் மூளைக்குச் சென்றதும், நினைவாற்றலின் உறைவிடமான, 'ஹிப்போகேம்பஸ்' பகுதியை துாண்டுகிறது. இதனால், மூளைக்குள் உள்ள செல்கள் ஒன்றோடொன்று தகவல் பரிமாறும் திறன் சுறுசுறுப்படைகிறது. ஆய்வகத்தில், மந்த அறிவுள்ள எலிகளுக்கு, சினமால்டிஹைட் கலந்த தீனியை ஒரு மாதம் கொறிக்கத் தந்தனர் விஞ்ஞானிகள்.
இதன் விளைவாக, விரைவில் கற்கும் எலிகளுக்கு இணையாக கற்கும் திறனை மந்த எலிகளும் பெறுவதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
கற்கும் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மட்டுமல்லாது, மூளைத்திறனை குலைக்கும், 'அல்சைமர்ஸ்' மற்றும், 'பார்க்கின்சன்ஸ்' போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கும் சினமால்டிஹைட் உதவக்கூடும் என்று மருத்துவர் பாஹனும், அவரது குழுவினரும் நம்புகின்றனர்.
அடுத்து, மனிதர்கள் மீதான பரிசோதனைக்கு பாஹனின் குழு தயாராகி வருவதாக, 'நியூரோஇம்யூன் பார்மகாலஜி' என்ற ஆராய்ச்சி இதழ் தெரிவித்து
உள்ளது.
0 Comments