ஓமம் செய்யும் மாயம் ! வயிற்றுப் பொருமல் , உப்பிசத்திற்கு அருமருந்து !

vayitru porumal marunthu

குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, வயிற்றுப் பொருமல், வயிற்று வலி மற்றும் அஜீரணக் கோளாறுக்கான சிறந்த மருந்து, ஓமம்; 100 கிராம் ஓமத்தை, ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அது, பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால், வயிற்றுப் பிரச்னை தீரும்; உடல் பலம் பெறும்.

ஓமம் மற்றும் மிளகு தலா, 35 கிராம் எடுத்து, நன்கு இடித்து, பொடியாக்கி, அதனுடன், 35 கிராம் பனை வெல்லம் சேர்த்து அரைத்து, காலை - மாலை என இருவேளை, ஐந்து கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்று பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.


நல்ல துாக்கமும், பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இவை, பறந்து, போனால், நோய்களின் கூடாரமாக உடல் மாறுவதோடு, மன நலமும் பாதிக்கப்படும். பசியை துாண்டி, உண்ட உணவு எளிதில் ஜீரணமாகவும், வயிறு தொடர்பான பிரச்னைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி குடிக்கலாம்.

குடல் இரைச்சல், இரைப்பு, பல் நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்து.

குழந்தைகளின் சர்வரோக நிவாரணி, ஓமத் திரவம் தான். இது, வீட்டில் இருந்தால், குழந்தை முதல் பெரியவர்கள் வரை, வயிறு உபாதையின்றி வாழலாம்.

ஓமத்தில் சூப் வைத்து குடித்தால், உடல் சோர்வு நீங்கி, சுறுசுறுப்பு கிடைக்கும்.

ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் கலந்து, ஒரு சொட்டு நெய் ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயை தொட்டு சாப்பிட்டால், காய்ச்சல் ஓடி விடும்.

அரை டீஸ்பூன் ஓமத்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, தினமும் குடித்து வந்தால், ஆஸ்துமா அண்டாது.

நாட்டு மருந்துக் கடைகளில், ஓம எண்ணெய் கிடைக்கும்; மூட்டு வலிக்கு இதைத் தடவினால், நாளடைவில் மூட்டு வலி குணமாகும்.

ஓம துாளுடன் சிறிது உப்பு சேர்த்து, மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.

Post a Comment

0 Comments