ஆஸ்துமா பிரட்சினையிலிருந்து முற்றிலும் விடுபட இந்த யோகா செய்யுங்க !

ஆஸ்துமா என்பது மனித சுவாச அமைப்பில் உருவாகும் ஒரு நோயாகும். காற்று செல்லும் வழிகள் சுருங்குவதால் இது ஏற்படுகிறது.

அலர்ஜிப் பொருள் ஒன்றுக்கு ஆளாதல், குளிர்ந்த காற்று, மன அழுத்தம் போன்ற தூண்டுதல்களுக்கு ஏற்படும் எதிர்வினையாக இந்த காற்றுவழி சுருக்கம் உருவாகின்றது. இந்த சுருக்கம் தான் ஓசையுடன் மூச்சுவிடுதல், சுவாச நேரம் குறைதல், நெஞ்சு இறுக்கமாதல், இருமல் போன்ற அறிகுறிகளை உண்டு பண்ணுகின்றது. மூச்சு வெளியிடுவதில் சிரமம் இருக்கும். இதன் தாக்குதல்கள் ஒரு மணி நேரம் முதல் பல மணி நேரம் இருக்கும்.

நுரையீரல் காற்று செல்லும் பாதைகள் சுருங்குவதால் காற்று ​செல்வது குறைக்கப்படுகின்றது. மூச்சுக் குழல் சுவர்களில் எரிச்சல் ஏற்படுவதால் இந்தச் சுருக்கம் ஏற்படுகின்றது. இதனால் மூச்சுக் குழலில் உள்ள சுற்றடுக்கு வீங்குகிறது.

மனித இயக்கத்தின் முக்கியமான நமது நுரையீரல் சுவாசிப்பதற்கு ஏற்ற மாதிரி இதயத்தின் சதைகள் சுருங்கி விரிய மார்பு எலும்புகள் அதற்கு ஒத்துழைக்கின்றன. நுரையீரலின் பைகளில் சென்ற காற்று பிராண வாயுவைக் கொடுத்துவிட்டு கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு வெளியில் வருகிறது. ஒரு மனிதன் சுவாசிக்கும் பொழுது 7 லிட்டர் காற்று உள்ளே போய் 7 லிட்டர் காற்று வௌயே வர வேண்டும். ஆனால் 7 லிட்டர் காற்றை உள்ளிழுத்துவிட்டு பழைய அளவில் வெளிக்காற்றை உள்ளிழுக்க முடியாது. இதனால் மூச்சு திணறல் ஏற்படுகிறது.

உள்ளே இருக்கும் 4 லிட்டர் காற்று வெளியேற முயற்சிக்கும் ​பொழுது இருமல் ஏற்படும். நுரையீரலின் உள்ளே சிறிய அறைகளில் தங்கியுள்ள காற்று வெளியேறும் பொழுது விசில் சத்தம் வருகிறது. இதுவே வீஸிங் ஆஸ்துமா ஆகும்.

நுரையீரல், ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றது. இந்நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாகவும் வருகின்றது. ஆண்களுக்கு அதிகமாக வரக் காரணம் அதிக மன அழுத்தம், கவலை காரணமாக முதலில் தலைவலி, தூக்கமின்மை வரும். பின் நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல், ஆஸ்துமாவாக வருகின்றது.

இந்நோயை இரண்டு வகையாக பிரிக்கின்றனர். முதல் வகை குழந்தைகளுக்கு வரும். இதில் ஆண் குழந்தைகளுக்கு, பரம்பரையாக வரும்.

இரண்டாவது வகை நடுத்தர வயதினருக்கு வரக்கூடியது. 25 –வயதிற்கு மேல் பெண்களை அதிகம் பாதிக்கிறது. இந்தநோய் மழைக்காலம், குளிர்ந்த காற்று வீசும் காலங்களில் இரவில் தான் அதிகமாக தாக்கும். குறிப்பாக அதிகாலை மூன்று மணி முதல் தொடங்கும். காரணம், நாம் உண்ணும் உணவிலிருந்து வெளிப்படும் சக்தி அதிகாலை மூன்று மணிக்கு நுரையீரலுக்கு ஊடுருவுகிறது. இதன் இயக்கம் 4 மணிக்கு பெற்று 5 மணிக்கு முழுவதுமாக குறைந்து பெருங்குடலை அடைகிறது. அப்பொழுது பலவீனமடைந்துள்ள நுரையீரல் அச்சக்தியை தாங்க முடியாமல் திணறுகிறது. அதனால் நோயாளி படுக்கையை விட்டு எழுந்து மூச்சுவிட முடியாமல் திணறுகிறார். இழுப்பும், இருமலும் அதிகமாகயிருக்கும். சளி தொண்டையை அடைப்பது போன்று அவதிப்படுவர். இந்த இழுப்பு சில நாட்கள் தொடர்ந்து மூன்று, நான்கு நாட்கள் இருக்கும்.

பின்பு அவர்கள் நரம்பூசி, மாத்திரை (பெட்லினன், டெட்ரால், பிராங்கோபளஸ்) சாப்பிட்டு சற்று சரியாகும். ஆனால் உடல் ​சோர்வாகயிருப்பர். கழுத்துவலி, நடுமுதுகு வலி, அடி முதுகுவலி இருக்கும். நிமிர்ந்து உட்கார முடியாது. பசியிருக்காது. அப்படியே பசித்து உணவு உண்டாலும், உடன் வயிறு உப்பி அஜீரணக் கோளாறு, மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்படும்.

சிலருக்கு தங்கள் வீட்டை விட்டு வெளியூர் சென்றால், வெளியூரில் தங்கினால் இரவு ஆஸ்துமா அதிகமாகிவிடும். தூக்கம் வராது அவதிப்படுவர். சிலர் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்டால் அல்லது அதிர்ச்சியூட்டும் செய்திகளைக் கேட்டால், சாதாரணமாக பகலில் இவ்வாறு ஏதேனும் செய்தி கேட்டால் உடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆஸ்துமா அதிகமாகும். காரணம் ஏற்கனவே நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அதிர்ச்சியான செய்தி கேட்கும் பொழுது நுரையீரல் அதனை தாங்கும் சக்தியை இழக்கிறது. நுரையீரலில் காற்றின் இயக்கம் தடைபடும்.

எப்படி இதை நான் உணர்ந்தேன்?


இதைப் படிக்கும் ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றும். எப்படி சரியாக ஆஸ்துமாவின் பாதிப்புகளை எழுதுகிறார் என்று. இதோ அதற்கான விடை. இன்று நான் யோகக் கலைமாமணி, 28 வருடம் யோகத்துறையில் அனுபவமுள்ளவன், எண்ணற்ற புத்தகங்களை எழுதியுள்ளேன். ஆஸ்துமாவிற்கு தீர்வு சொல்லும் ஒரு யோகாசன ஆசரியர் என்றாலும் எனக்கு பிறந்தது முதல் ஆஸ்துமா என்ற நோய் இருந்தது. ஆஸ்துமாவால் நான் அடைந்த உடல் மனரீதியான வேதனை சொல்ல முடியாது. ஆங்கில மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற எல்லா மருத்துவமும் எடுத்தும், ஆஸ்துமா குணமாகாமல் அவதிப்பட்டேன். அப்பொழுது மதுரையில் B.Com., முதல் வருடம் 1986 –ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். மதுரையில் சற்குரு சீரோ பிக் ஷு என்பவர் ஶ்ரீ பதஞ்சலி மஹரிஷியின் யோகக் கலைகளான யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் முதலியவற்றை கற்றுத் தருகின்றார் என்பதை கேள்விப்பட்டு அவரிடம் சென்று நான் ஒரு ஆஸ்துமா நோயாளி என்றேன். அவர் சிரித்த படியே நீ ஒர் ஆத்மா. உன்னுள் உள்ள ஆத்ம சக்தி மூலம் எல்லா வியாதியும் நீக்க முடியும் என்று எளிமையான யோகாசனம், தியானம், நாடிசுத்தி, பிராணயாமம் கற்றுக் கொடுத்தார். நம்பமாட்டீர்கள், மூன்று மாதத்தில் பரிபூரண குணமடைந்தேன். 1987 –ல் மதுரையில் யோகாசனப் போட்டியில் முதல் பரிசு பெற்று சேம்பியன்சீப் கப் வாங்கினேன். அன்று முதல் இன்று வரை எனது 30 வருட யோக அனுபவத்தின் மூலம் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான யோகச்சிகிச்சை அளிக்க முடிகின்றது.

ஆஸ்துமாவிற்கு நிரந்தர தீர்வு யோகக்கலையில் மட்டுமே உள்ளது.

இந்த வியாதி முழுக்கவும் நமது உடலில் இயங்கும் பிராணனை மையமாக வைத்து அமைந்துள்ளது. மூச்சோட்டத்தை சரி செய்தால் இதிலிருந்து முழுமையான விடுதலை கிடைக்கும். எனவே நாடிசுத்தி என்ற மூச்சு பயிற்சியை எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.

நாடிசுத்தி செய்ய என்ன செய்ய வேண்டும்?


இருக்கை

உங்களது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். சுகாசனத்தில், சாதாரணமாக அமர்ந்து கொள்ளலாம். உடலில் ஆஸ்துமா வியாதி உள்ளவர்கள் ஒரு நாற்காலியில் ஒரு வெள்ளைத்துணி விரித்து அதில் அமர்ந்து கொள்ளலாம். முதுகெலும்பு நேராக வைத்து நாற்காலியின் பின்புறம் முதுகு படும்படி அமர்ந்து கொள்ளலாம்.

உடல்நிலை ஓரளவு நலமாக உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளலாம்.

தயார் நிலை

நாடிகளைச் சுத்தம் செய்யும் நாடிசுத்தியின் முழு பலனை அடைய நம் உடலையும், மனதையும் தயார் செய்ய வேண்டும். நிமிர்ந்து சுகாசனத்தில் அமர்ந்தவுடன், கண்களை மூடவும். கைகளை சின் முத்திரையில் வைக்கவும். (படத்தை பார்க்கவும்)

உங்களது மனதை தலை வெளி தசைகள், கழுத்து, தோள்பட்டை வெளி தசைகள், வலது கை, இடது கை, இருதயம், வயிறு, வலது கால், இடது கால், தலை முதல் கால்வரை ஒவ்வொரு பகுதியிலும் நிறுத்தி அந்தப் பகுதியில் உள்ள எல்லா அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணி RELAX செய்யவும்.

பின் மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை இரு நாசி வழியாக வெளியிடவும். மூச்சை உள் இழுக்கும் பொழுது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை உள் வாங்குவதாக எண்ணவும். மூச்சை வெளியிடும் பொழுது நம் உடல் உள் உறுப்புகளில் உள்ள டென்ஷன், அழுத்தம் வெளியேறுவதாக எண்ணவும். இதுபோல் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் செய்யவும். இப்பொழுது நமது உடல் வெளி தசைகள், உடல் உள் உறுப்புகளில் உள்ள எல்லா அழுத்தம், டென்ஷன் வெளியாகி இந்த உடல் நாடிசுத்தியின் முழுப்பலனை அடைவதற்கு தயாராகிவிட்டது.

முதல் பயிற்சி

இடது கை சின்முத்திரை (பெருவிரலும், ஆள்காட்டி விரலும் சேர்க்கவும். மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கியிருக்கவும்.)

பெருவிரலினால் வலது நாசியை அடைக்கவும். இடது நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை முடிந்த அளவு உள் இழுக்கவும். இடது நாசியிலேயே மெதுவாக மூச்சை வெளியிடவும். இதேபோல் பத்து முறைகள் செய்ய வேண்டும். தொடர்ந்து பத்து முறைகள் செய்ய முடியாதவர்கள், ஐந்து முறை செய்துவிட்டு ஒரு நிமிடம் RELAX செய்துவிட்டு மீண்டும் ஐந்து முறை செய்யலாம்.

yoga to cure asthma


இரண்டாவது பயிற்சி

வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைக்கவும். வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். வலது நாசியிலேயே மீண்டும் மெதுவாக மூச்சை வெளியிடவும். மீண்டும் வலது நாசியில் மூச்சை உள் இழுத்து உடன் வலது நாசியில் மூச்சை வெளியிடவும். இதேபோல் பத்து முறைகள் நிதானமாக செய்யவும்.

பயிற்சி மூன்று

இப்பொழுது வலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக மூச்சை மெதுவாக உள் இழுத்து உடன் இடது நாசியை ​மோதிர விரலால் அடைத்து வலது நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். இதேபோல் மீண்டும் இடது நாசியில் மூச்சை இழுத்து வலது நாசியில் மூச்சை வெளிவிடவும். இதேபோல் பத்து முறைகள் செய்யவும்.

பயிற்சி நான்கு

இப்பொழுது வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். உடன் பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசியில் மெதுவாக மூச்சை வெளிவிடவும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும்.

பயிற்சி ஐந்து

மேற்குறிப்பிட்ட நான்கு பயிற்சிகளை நிதானமாக செய்தபின் கண்களை மூடி இயல்பாக இருநாசி வழியிலும் மூச்சு உள்ளே செல்வதையும், மூச்சு வெளிவருவதை மட்டும் கூர்ந்து கவனிக்கவும். மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் உங்கள் மூச்சில் மட்டும் கவனம் செலுத்தவும். பின் மெதுவாக கண்களைத் திறந்து கொள்ளவும்.

பயிற்சி ஆறு (ஜலந்திர பந்தம்)

இப்பொழுது இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். உடன் தலையை குனிந்து பத்து விநாடிகள் மூச்சை அடக்கியிருக்கவும். உடன் மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளிவிட்டு தலையை நிமிர்த்தவும். இதேபோல் மீண்டும் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து உடன் தலையைக் குனிந்து பத்து விநாடிகள் மூச்சடக்கியிருக்கவும். மெதுவாக மூச்சை வெளிவிட்டு நிமிர்ந்து கொள்ளவும். இதுமாதிரி பத்துத்தடவைகள் பயிற்சி செய்யவும்.

ஐந்து முறை பயிற்சி செய்து சற்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் ஐந்து முறை பயிற்சி செய்யலாம்.

உடலில் உள்ள நாடி நரம்புகள் சளியின் காரணமாக செயல்பாடு தடைபடுவது தான் ஆஸ்துமாவிற்கு மூலகாரணம். நாடிகளை சுத்தம் செய்யும் ஒரே பயிற்சி மேற்குறிப்பிட்ட எளிய நாடிசுத்தி பயிற்சி தான். இதனை நம்பிக்கையுடன் பயிற்சி செய்யுங்கள். உடலில் சளி தொந்தரவு நீங்கும். நாடி நரம்புகளில் இரத்த ஓட்டம் சிறப்பாக இயங்கும். நாடிகள் சுத்தமானால், மூச்சோட்டம் சிறப்பாக இயங்கும். அதுமட்டுமா! ஆஸ்துமா என்ற கொடிய வியாதி பறந்தோடும். மூச்சில் கவனம் செலுத்துவதால், நமது உடலில் கடந்து உள்ளே ​செல்லும் மூச்சு தான் கடவுள், ஆன்மா. அதில் லயித்து ஆனந்தம​டையலாம்.

மகராசனம்

ஆஸ்துமாவினால் நுரையீரல் பாதிப்பு இருக்கும். இருதயப் பலவீனம் இருக்கும். இதற்கு ஓர் எளிமையான மிக அற்புதப்பலன் தரும் ஆசனம் தான் மகராசனமாகும்.

ஆஸ்துமா நோய் அதிகமாக இருக்கும் பொழுது அவர்களால் மல்லாந்து படுக்க முடியாது. அப்படி படுக்க முயற்சித்தாலும் அவர்களுக்கு மூச்சுத் திணறல், நெஞ்சுவலி ஏற்படும். அந்த சமயத்தில் இந்த மக்கராசனம் ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடங்கள் இருந்தால் மூச்சோட்டம் சரியாகிவிடும். உடலுக்கும், நாடி நரம்புகளுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கும்.

மகராசனம் செய்முறை

குப்புறப்படுத்துக் கொள்ளவும்.

இரண்டு கைகளையும் முன்னால் கொண்டு வரவும்.

வலது கையை மடித்து இடது தோள்பட்டை மீதும், இடது கையை மடித்து வலது தோள்பட்டையின் கீழும் வைத்து முகத்தை மடித்து கைகளின் இடையே வைத்து நெற்றிப் பொட்டை கைகளின் மீது அழுத்தி வைக்க வேண்டும்.

கால்களை ஒரு மூன்றடி இடைவெளியில் பிரித்து விலக்கி வைக்க ​வேண்டும்.

கண்கள் மூடியிருக்க வேண்டும்.

இந்த நிலையில் முப்பது விநாடிகள் முதல் அறுபது விநாடிகள் இருக்கலாம்.

பின்பு கால்களை ஒன்று சேர்த்து, கைகளை பிரித்து நீட்ட வேண்டும்.

வலது அல்லது இடது புறமாக புரண்டு ஒருக்களித்து எழுந்து அமர வேண்டும்.

இந்த ஆசனத்தை காலை, மதியம், மாலை மூன்று வே​ளைகள் செய்யலாம். மிக நல்ல பலன் கிடைக்கும்.

ஆஸ்துமா குணமாக உணவு முறைகள்


அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக காற்று செல்வதற்கு இடமிருக்க வேண்டும்.

ஆஸ்துமா உள்ளவர்கள் முழுவயிறு சாப்பிட்டால், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதிக பிராணசக்தி ஜீரணமாவதற்கு சென்றுவிடும். ஏற்கனவே உடலில் நுரையீரலில் பிராண ஓட்டம் சரியாக இல்லை. எனவே அஜீரணமாகி வயிறு உப்பிசமாகி உடன் மூச்சுத்திணறல் வரும்.

மிகவும் ஆறிய குளிர்ந்த உணவைச் சாப்பிடாதீர்கள். உடன் சமைத்த சூடான உணவைச் சாப்பிடுங்கள்.

இரவுச் சாப்பாடு மிகக்குறைவாக 7.00 மணிக்குள் சாப்பிடவும். அதுவும் சூரியன் மறையுமுன் 6.00 மணிக்குள் சாப்பிட்டால் மிகவும் நல்லது. பொதுவாக சூரிய வெளிச்சம் இருக்கும் பொழுது உண்ணும் உணவு சூரிய கதிர்களால் விரைவில் ஜீரணமாகும். ஆரோக்கியமாக வாழவே நாம் இரவு சாப்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். ஆஸ்துமா உள்ளவர்கள் இதில் முக்கிய கவனம் ​செலுத்த வேண்டும்.

இரவில் தயிர், பால், குளிர்ந்த பானங்கள் அறவே தவிர்க்கவும். இரவில் கீரை தவிர்க்கவும்.

மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்துக் கொள்ளவும். மன இறுக்கம், கோபம் கூடாது.

பூண்டு போட்டு அரிசிக் கஞ்சி சாப்பிடவும். பாலில் மிளகு, மஞ்சள் பொடி போட்டு சாப்பிடவும்.

திருமண விழாவிற்கோ, மற்ற விழாவிற்கோ சென்றாலும் இரவு அதிகமாக உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

ஆஸ்துமாவிற்கு எளிய சித்த மருத்துவம்

அருகம்புல் சாறு அதிகாலையில் பருகவும்.

துளசி இலை 10 இலைகள் மென்று சாப்பிடவும்.

தூதுவளைச் செடி இலைகளை ரசம் வைத்து உணவுடன் உண்ணவும்.

வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தண்ணீர் குடிக்கவும்.

மாதுளம் பழச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கவும்.

முசுமுசுக்கை இலையை வதக்கி கீரையாகச் சாப்பிடவும்.

கற்பூரவல்லி இலை மூன்று, மிளகு மூன்று, வெற்றிலை இரண்டு நீரில் கொதிக்க வைத்து வற்றியவுடன் அந்த நீரைப் பருகவும்.

ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். சளி வெளியேறும்.

மஞ்சள் தூள் ஒரு கரண்டி, தேன் ஒரு கரண்டி கலந்து சாப்பிடவும்.

இருமல் இருக்கும் பொழுது எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து சாப்பிடவும்.

அதிகாலையில் இருமல் இருந்தால் கடுகை அரைத்து தூள் செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடவும்.

ஆடாதோடா இலையை கீரை போல் சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடவும்.

முக்கிய குறிப்பு

மேற்குறிப்பிட்ட சித்த வைத்தியத்தில் ஒரு மாதம் ஏதாவது மூன்று மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த மாதம் அடுத்த மூன்று வகைகள் எடுத்துக் கொள்ளுங்கள்.

சூரிய சக்தி பெறல்

அதிகாலையில் சூரியன் உதயமாகும் பொழுது காலை 6.00 முதல் 6.30 மணிவரை, மாலை சூரியன் மறையும் பொழுது 5.30 முதல் 6.00 மணி வரை சூரியனைப் பார்த்து நமது நாக்கை வெளியில் நீட்டி கழுத்தை மேலே தூக்கி தைராய்டு, பாரா தைராய்டில் உள் நாக்கில் சூரிய ஒளி படும்படி பத்து முதல் பதினைந்து விநாடிகள் இருக்கவும். பின் நாக்கை, வாயை மூடிக் கொள்ளவும். இதுபோல் மூன்று முறைகள் காலை, மாலை பயிற்சி செய்யவும். நுரையீரல் அடுக்குகளில் உள்ள சளி வெளியேறும்.

இத்துடன் சூரியனைப் பார்த்து கண்களை மூடி உமது ஒளிக்கதிர்கள் இந்த உடலில் உள்ள வியாதியை நீக்கட்டும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கட்டும் என்று இரண்டு நிமிடம் பிரார்த்தனை செய்யவும்.

மேற்குறிப்பிட்ட யோகப்பயிற்சிகளை நம்பிக்கையுடன், தினமும் உற்சாகமாக, முக மலர்ச்சியுடன் பயிற்சி செய்யுங்கள். ஆஸ்துமா நீங்கும். ஆத்மானந்தம் பிறக்கும்.

அனைவரும் இந்தப் பயிற்சியை பயின்றால் எவ்வளவு வயதானாலும் நுரையீரல், இதயம், நாடிகள் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, சைனஸ் நோய்கள் நமக்கு நிச்சயம் வராது. ஆஸ்துமா இல்லாத ஒரு நாடாக ஆத்மாவில் லயித்த ஒரு நாடாக நம்நாடு திகழ வேண்டும். அதற்கு அனைவரும் மேற்கூறிய யோகப் பயிற்சியை பயிலுங்கள்.

Post a Comment

0 Comments