குழந்தைகளின் நெஞ்சு சளி போக்க வீட்டு வைத்தியம் !

நெஞ்சு சளி பிடித்துக் கொண்டால் இருமி , இருமி நெஞ்சே எரிச்சல் அடைய ஆரம்பித்துவிடும். அதுவும் குழந்தைகளுக்கென்றால் சளி கரையாமல் மூச்சு விட சிரமபடுவர். நெஞ்சில் சளி கோர்த்துக்கொண்டு "கர்கர்" என ஒரு வித சப்தம் வரும்.

என்னதான் மருத்துவரிடம் சென்றாலும், உடனடியாக அதற்கு தீர்வு கிடைக்காது. குழந்தைகளுக்கு தூங்க வைப்பதற்கான மருந்துகள் கொடுப்பார்கள். சளியால் பிள்ளைகள் தூங்கும்போது மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சுவிட சிரம்பட்டு வாயில் மூச்சு விடுவர். இதற்கெல்லாம் இயற்கையில் அருமையான "வீட்டு வைத்தியம்" உள்ளது.

சளி மற்றும் இருமலை போக்க நிறைய வீட்டு வைத்தியங்கள் இருக்கிறது. அதில் குழந்தைகளுக்கு ஏற்றது என்ன என்பதை சோதனை செய்து இங்கு தந்துள்ளேன்…

கவனிக்க : ஒரே நேரத்தில் எல்லா மருந்துகளையும் பின்பற்ற வேண்டாம். இதில் குறிப்பிட்டுள்ள எல்லாம் உங்கள் தகவலுக்கு தான். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு தன்மையுடன் இருக்கும் என்பதால் அவர்களின் உடலுக்கு ஏற்றது எது? அலர்ஜியை ஏற்படுத்தக் கூடியது எது என்பதை தெரிந்து கொண்டு எச்சரிக்கையோடு பயன்படுத்துங்கள்.

பச்சிளம் குழந்தைகளில் சிலருக்கு இந்த மருத்துவ முறைகள் ஒத்துக் கொள்ளாது என்பதால் குழந்தைகளின் வயதை கருத்தில் கொண்டு இதனை பின்பற்றுங்கள்..

ஒருவேளை புதிதாக எதையும் செய்வதற்கு முன்னர் உங்கள் மருத்துவரை உரிய முறையில் கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் நீங்கள் இந்த முறைகளை பின்பற்றலாம்…

1. லேசான ஜலதோஷம் (மூக்கில் இருந்து நீர் வடிதல்)
2. லேசான இருமல்
3. தொண்டை வலி
4. மூக்கடைப்பு

குழந்தைகளின் சளி, இருமலை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் :


1. கற்பூரம் / சூடம்

தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி அதில் தூள் செய்த கற்பூரத்தை போடுங்கள். இது நன்றாக ஆறிய பிறகு அதில் இருந்து 4 முதல் 5 சொட்டுகள் எண்ணெயை உள்ளங்கையில் தேய்த்து குழந்தையின் மார்பு பகுதியில் நன்றாக தடவி விடுங்கள். மிகவும் குறைவான அளவு கற்பூரத்தை பயன்படுத்துங்கள். ஏனெனில் அதிகளவு கற்பூரத்தை பயன்படுத்தும் போது அது குழந்தையின் சருமத்தை பாதிக்க கூடும்.

2. யூகலிப்டஸ் ஆயில்

குழந்தையை யூகலிப்டஸ் ஆயிலை சுவாசிக்க வையுங்கள். மேலும் குழந்தை படுக்கும் இடத்தை சுற்றி யூகலிப்டஸ் ஆயிலை சிறிது தெளிக்கலாம்…

3. மஞ்சள்

விரலி மஞ்சளை எடுத்துக் கொண்டு அதை மெழுகுவர்த்தி அல்லது விளக்கு எரியும் நெருப்பில் சுட்டுக் கொள்ளுங்கள். அந்த புகையை ஒரு நிமிடம் குழந்தை சுவாசிக்கும் படி செய்யுங்கள். மஞ்சள் எரிந்த பிறகு அது நூல் போல தான் வரும் என்பதால் புகையை சுவாசிக்க வைக்க பயப்பட வேண்டாம்…
2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, குடிக்கும் பாலுடன் மஞ்சள் தூள் சேர்த்து

4. சாய்வான முறையில் தூங்க வைத்தல்

சளி தொந்தரவால் உங்கள் குழந்தை தூங்க சிரமப்படுகிறதா? தலையணையை குழந்தையின் முதுகுப்புறம் வைத்து சற்று சாய்வான முறையில் குழந்தையை தூங்க வையுங்கள். இதனால் மூக்கில் இருந்து சளி தொந்தரவு வராமல் குழந்தை நிம்மதியாக தூங்கும்.

5. பூண்டு

2 பல் பூண்டை எடுத்து உரித்துக்கொண்டு அதை 50 மில்லி தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தரவும். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

6. இஞ்சி

சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.

7. சிக்கன் சூப்

சளித் தொந்தரவை போக்க சிக்கன் சூப்பை 8 மாதங்களிலிருந்து குழந்தைக்கு தரலாம்.

8. துளசி இலைகள்

துளசி இலையில் சிறந்த மருத்துவ தன்மை உள்ளதால் இதனை தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து தரலாம். தண்ணீரில் இதனை ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் அந்த தண்ணீரை குழந்தைக்கு கொடுக்கலாம். இதனை 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு தர வேண்டும்.

9. தேன்

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு அரை டீஸ்பூன் தேனை எடுத்து அதை பாலில் கலந்து நாளொன்றுக்கு இரு முறை தரலாம்…

10. ஓமம்

ஓமத்தை ஒரு கடாயில் போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனை ஒரு துணியில் கொட்டி மூட்டை போல கட்டிக் கொள்ளுங்கள். இதனை குழந்தையின் மூக்கருகே கொண்டு சென்று சுவாசிக்க வையுங்கள். அல்லது குழந்தையின் மூக்கருகே இதனை வைத்து விடலாம்…

11.சலைன் டிராப்ஸ்

குழந்தையின் மூக்கடைப்பை போக்கும் தன்மை சலைன் டிராப்ஸ்க்கு உண்டு. 2 முதல் 3 சொட்டுகளை மூக்கின் துவாரங்களில் விட்டு குழந்தையை சாய்ந்து இருக்கும் படி செய்யுங்கள். இது விரைவான நிவாரணம் அளிக்கும் ஒரு மருந்து.

12. வெண்டைக்காய்

வெண்டைக்காயில் உள்ள வழவழப்புத் தன்மை குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இது குழந்தையின் உடலில் உள்ள சளி மற்றும் இருமல் மற்றும் தொண்டை பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக்கி அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து குழந்தைக்கு குடிக்க தரலாம். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்கு இதனை தர வேண்டும்…

13. செவ்வந்திப்பூ / கெமோமில்

செவ்வந்திப்பூ சிறிது கலந்த டீயை 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு தரலாம். தொண்டை பிரச்சினைக்கு தீர்வளிக்கும் தன்மை இதில் உள்ளது.

14. எலுமிச்சம்பழம்

எலுமிச்சம்பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் அது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு லெமன் ஜூஸ் உடன் தேன் மற்றும் தண்ணீர் கலந்து தரலாம்…

15.பட்டை

பட்டையில் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் இருப்பதால் இது உடலில் ஏற்படும் தொற்று நோய் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கு தீர்வளிக்கும். ஆனால் இதனை ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கே தர வேண்டும். பட்டை தூள் கால் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனை ஒரு டேபிள்ஸ்பூன் தேனுடன் கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை தரவும். குழந்தைக்கு சளி இருமல் தொந்தரவு இருப்பதாக தோன்றிய ஆரம்ப கட்டத்திலேயே இதனை தருவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

16. கடுகு எண்ணெய்

5 முதல் 10 டீஸ்பூன் கடுகு எண்ணெயில் நசுக்கிய பூண்டு மற்றும் ஓமத்தை தாளிக்கவும். ஆறிய பிறகு இந்த கலவையை எடுத்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது இதனை எடுத்து குழந்தையின் மார்பு பகுதி, நெற்றி மற்றும் தொண்டையில் தடவுங்கள்.

17.குழந்தைகளுக்கான விக்ஸ்

குழந்தைகளுக்கான விக்ஸ் வாங்கிவைத்துக் கொள்ளுங்கள். சளி தொந்தரவு ஏற்படும் போது குழந்தையின் பாதங்களில் இதனை தடவி சாக்ஸ் போட்டு விடுங்கள். மேலும் இதனை குழந்தையின் மார்பு மற்றும் தொண்டை பகுதியில் தடவலாம். குழந்தைக்கு சிறந்த தீர்வளிக்கும் முறை இது.

18. ஈரப்பதமூட்டி

பொதுவாக குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் தொல்லை ஏற்படும் போது காற்றை உள்ளிழுப்பதில் சிரமம் ஏற்படும். அப்போது மிதமான ஈரப்பதமூட்டியை அறையில் வைத்து அதை குழந்தையை சுவாசிக்க செய்யலாம்.

19. ஆவி பிடித்தல்

ஆவி பிடிக்கும் போது குழந்தைகளை தனியாக விடாதீர்கள். பக்கெட் அல்லது பாத் டப்பில் வெந்நீரை எடுத்துக் கொண்டு குழந்தைகளின் கைகளை பிடித்துக் கொண்டு மூச்சை உள்ளிழுக்க வைக்கவும். சூடான காற்று உள்ளே செல்லும் போது குழந்தையின் உடலில் இருக்கும் கபம் வெளியேறி விடும்.

20. நெய்

2 டேபிள் ஸ்பூன் நெய்யை எடுத்து அதை சூடாக்கி அதில் 2 முதல் 3 மிளகை போட்டு பின் அதனை அரைத்து வறட்டு இருமலால் அவதிப்பட்டு வரும் குழந்தைக்கு கொடுங்கள். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைக்கு இதனை தரலாம்…

இந்த தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்…மேற்குறிப்பிட்ட மருத்துவமுறைகளை பின்பற்றினால் குழந்தைகளுக்கு நெஞ்சு சளி ஏற்பட்டாலும் கவலைப்படாமல் வைத்தியம் செய்து மன நிம்மதியோடு இருக்கலாம். இயற்கை முறையில் செய்வதால் எந்த ஒரு பக்க விளைவுகளும் வருவதில்லை.

கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்கள் குழந்தையிடம் தென்பட்டால் உடனே மருத்துவரை சந்திக்கவும்.

1. மூக்கில் இருந்து நீர் வடியும் போது அது மஞ்சள் அல்லது அடர் பச்சை நிறத்தில் இருந்தால்
2. அதிகளவிலான சளி வெறியேறும் போது (மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் வெளியேறினால்)
3. அளவு கடந்த காய்ச்சல்
4. அலர்ஜியின் காரணமாக உணவை விழுங்குவதில் சிரமம் இருந்தால்
5. மூச்சை இழுப்பதில் சிரமம்
6. சுவாசிக்கும் நேரம் அதிகரித்தால்

இதுபோன்ற அறிகுறிகளின்போது இயற்கை வைத்தியத்தோடு, உடனடியாக மருத்துவரையும் சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்வது நலம்.

Post a Comment

0 Comments