யானைக்கால் நோய் குணமாக சித்த வைத்தியம் !!!


யானைக்கால் நோய் (Elephantiasis) என்பது, ஃபைலேரியா (Filaria) எனும் நுண்ணிய ஒட்டுண்ணிப் புழுக்கள் நமது நிணநீர் மண்டலத்தை தாக்குவதால் ஏற்படும் ஒரு நோய். மனிதர்களுக்கு இந்த நோய் நுளம்புகளின் (கொசு) வழியே பரவுகிறது.

இந்த நோய் பாதிக்கப் பட்டவர்களின் தோலும் அதன் கீழே உள்ள திசுப் பகுதிகள் வீககமடைந்து விகாரமான தோற்றத்தைத் தரும். தற்போது இந்த நோய் பெருமளவில் கட்டுப் படுத்தப் பட்டாலும் முற்காலத்தில் பரவலாய் பலரும் இதனால் பாதிக்கப் பட்டிருந்தனர்.

யானைக்கால் நோய்கான தீர்வுகளை நமது முன்னோர்கள் அருளிச் சென்றிருக்கின்றனர். அத்தகைய ஒரு தீர்வினை இன்றைய பதிவில் பார்ப்போம். புலிப்பாணி சித்தர் தனது “புலிப்பாணி வைத்தியம்” என்ற நூலில் இந்த நோய்க்கான தீர்வினை பின்வருமாறு அருளியிருக்கிறார்.

வானித்தேன் கருங்குருவை மாப்படி கால்தான்
வகையாகத் திருகுகள்ளிப் பாலரைக்கால்
நசனித்த பசுப்பால் தானரைக் காலாகும்
நறுந்தேனும் படியரைக்கால் நவிலக்கேளு
தசனித்த மதனிலே கலந்து கொண்டு
தயவாக அடுப்பேற்றி லேகியமாய்க் கிண்டி
அசனித்து ஆறவிட்டுக் கல்லிலாட்டி
அப்பனே கலசத்தில் பதனம் பண்ணே.

பண்ணப்பா கழற்சிக்கா யளவாகக்கொள்
பக்குவமா யைந்துதின மிருநேரந்தான்
நண்ணப்பா இம்முறையாய் மூன்று மாதம்
நன்மையுடன் கொள்வதற்குப் பத்தியங்கேள்
உண்ணப்பா நெய்பால் பசும்பயறாகும்
உத்தமனே வறுத்தவுப்பு மிகவுமாகும்
கண்ணப்பா மறுபத்தியமிருந்து விளக்கெண்ணெயால் மூழ்கு
கருணையுள்ள போகருட கடாட்சந்தானே.

கருங்குருவை அரிசி மாவு கால் படி, திருகுக் கள்ளிப் பால் அரைக்கால் படி, பசுவின் பால் அரைக்கால் படி, நல்ல தேன் அரைக்கால்படி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பில் ஏற்றி, நன்கு கிண்டி லேகிய பதத்தில் வந்தவுடன் இறக்கி ஆற விட வேண்டும். நன்கு ஆறிய பின்னர் அதனைக் கல்வத்திலிட்டு நன்றாக அரைத்து எடுத்து சேமித்துக் கொள்ள் வேண்டுமாம்.

யானைக் கால் நோயினால் பாதிக்கப் பட்டவருக்கு தினமும் இரண்டு வேளை இந்த லேகியத்திலிருந்து கழற்சிக்காய் அளவு சாப்பிடக் கொடுக்க வேண்டுமாம். இவ்வாறு மூன்று மாதம் தொடர்ந்து சாப்பிடவேண்டும் என்கிறார்.

இந்த காலகட்டத்தில் நெய், பசும்பால், பச்சைப்பயறு, வறுத்த உப்பு ஆகியவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் மறுபத்தியம் இருந்து விளக்கெண்ணெயால் தலை முழுக யானைக் கால் நோய் குணமாகுமாம். இதனை குருநாதர் போகருடைய கருணையினால் சொல்கிறேன் என்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே!

Post a Comment

0 Comments